

குளித்தலை,
குளித்தலை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கைப்பை பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தென்கடை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை மனைவி அம்பிகா(வயது 34). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது ஸ்கூட்டரில், தெற்கு மாடு விழுந்தான் பாறை பகுதியை சேர்ந்த காமாட்சி (37) என்பவரை அமர வைத்து கொண்டு வீட்டிலிருந்து குளித்தலை நகரப் பகுதிக்கு செல்வதற்காக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.
குளித்தலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அம்பிகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். அப்போது சுதாரித்து சற்று நகர்ந்து கொண்டதால் பின்னால் அமர்ந்து வந்த காமாட்சி கையில் இருந்த கைப்பையை பிடுங்கிக்கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
அந்த கைப்பையில் ரூ.ஆயிரம். ஏ.டி.எம்., பான் கார்டு மற்றும் 2 செல்போன்கள் இருந்தன. இதனால் பதற்றம் அடைந்த இருவரும் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
இதில் கைப்பையை பறித்து சென்ற சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த டிப்ளமோ படித்து வரும் கிருஷ்ணமூர்த்தி மகன் முகேஷ் (19) மற்றும் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வரும் மூர்த்தி மகன் புவனேஷ்(19) ஆகிய 2 பேரை குளித்தலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.