துறைமுக வங்கி கணக்கில் இருந்து ரூ.100 கோடி நூதன மோசடி வழக்கில் வெளிநாட்டினர் 2 பேர் கைது

சென்னையில் வங்கியில் டெபாசிட் செய்த 100 கோடி பணத்தை நூதனமாக மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் வெளிநாட்டினர் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் போல அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
துறைமுக வங்கி கணக்கில் இருந்து ரூ.100 கோடி நூதன மோசடி வழக்கில் வெளிநாட்டினர் 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை துறைமுக சபை சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அந்த டெபாசிட் பணம், அந்த வங்கி கணக்கில் இருந்து, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கணேஷ் நடராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு நூதனமான முறையில் மாற்றப்பட்டுள்ளது.

கணேஷ்நடராஜன் தன்னை சென்னை துறைமுகத்தின் நிதி பிரிவு துணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அதற்கான ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்து, அதே வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, ரூ.100 கோடி பணத்தை அந்த புதிய கணக்கிற்கு மாற்றி, அதில் இருந்து ரூ.45 கோடி எடுத்து ஏப்பம் போட்டு விட்டதாக புகார் எழுந்தது.

இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் இந்த மோசடி பற்றி கண்டுபிடித்துவிட்டனர். கோயம்பேடு இந்தியன் வங்கியின் அப்போதைய மேலாளரின் துணையோடுதான் இந்த நூதன மோசடி அரங்கேறி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில், வங்கி கணக்கில் மீதி இருந்த ரூ.55 கோடி பணத்தை சுருட்ட விடாமல் முடக்கிவிட்டனர்.

அதிரடி சோதனை

இந்த மெகா மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் முதலில் புகார் கொடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. போலீசாரும் குறிப்பிட்ட இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதிராஜா மற்றும் பணத்தை சுருட்டியதாக புகார் கூறப்பட்ட கணேஷ் நடராஜன், இடைத்தரகர் மணிமொழி ஆகியோர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

வெளிநாட்டினர் கைது

இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் முக்கிய குற்றவாளியான கணேஷ்நடராஜன், இடைத்தரகர் மணிமொழி மற்றும் செல்வகுமார் என்ற செல்வம், ஜாகீர் உசேன், விஜய்ஹெரால்டு.ராஜேஷ்சிங், ஸ்ரீசியாத், அப்சர், சுடலைமுத்து என்ற அண்ணாச்சி ஆகிய 9 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்கள்.

நேற்று முன்தினம் இந்த வழக்கில் கேமரூன் நாட்டைச் சேர்ந்த பவுசியாமோ ஸ்டீவ், காங்கோ நாட்டைச் சேர்ந்த முசாசா இலுங்கா ஆகிய இருவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் மாணவர்கள் என்று கூறி விசா எடுத்து, சென்னை ராமாவரம் பகுதியில் தங்கி இருந்து உள்ளனர்.

இந்த மோசடிக்கு இவர்கள் இருவரும் உறுதுணையாக செயல்பட்டு உள்ளதாக சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com