

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நேரிட்ட அடுத்தடுத்த சங்கிலித் தொடர் வாகன விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அய்யூர் அகரம் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பைக் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சொகுசு பஸ்சின் மீது பலமாக மோதியது.
இந்த எதிர்பாராத மோதலால் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றார். அப்போது, பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் மற்றும் டெம்போ ஆகிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தின் தாக்கத்தால், பைக்கில் பயணித்த விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பூபதி மற்றும் காரில் பயணித்த சென்னை, முடிச்சூரைச் சேர்ந்த ஜான் அன்பழகன் (வயது 55) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் போலீசார் மற்றும் பொதுமக்கள், வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மேலும் படுகாயமடைந்த லாசர், சாலமன் மற்றும் கார் ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.