ராமர் குறித்து இரண்டு வரிகள்... வீடியோ வெளியிட்டு நடிகைகளுக்கு அழைப்பு விடுத்த குஷ்பூ

குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ராமர் குறித்து இரண்டு வரிகளில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.
ராமர் குறித்து இரண்டு வரிகள்... வீடியோ வெளியிட்டு நடிகைகளுக்கு அழைப்பு விடுத்த குஷ்பூ
Published on

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இதனிடையே நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ 'ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை' என நேற்று அறிவித்திருந்தார். மேலும் அவர் 'தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நாம் ராமரை பார்க்க இருக்கிறோம். ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது' என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ராமர் குறித்து இரண்டு வரிகளில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார். மேலும் நடிகைகள் மீனா, கீர்த்தி சுரேஷும் இதுபோல் பாடி வீடியோ வெளியிட அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் அந்த பதிவில், 'அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக கடவுள் ராமர் குறித்து இரண்டு வரிகளை கூறுகிறேன். ராமரைக் கொண்டாடும் இந்த மங்களகரமான நேரத்தில், ஸ்ரீராம பக்தர்களை இந்த இரண்டு வரிகளைப் படித்து பக்தி மற்றும் ஆன்மீகத்தின் செய்தியைப் பரப்ப அழைக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சி.ஆர். கேசவன், சுமலதா, நடிகைகள் சுஹாசினி, மீனா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷனுக்கும் இந்த நன்மையின் சங்கிலியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com