காங்கயம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது - ஒருவர் உடல் கருகி பலி

காங்கேயம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டீசல் டேங் வெடித்து தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி பலியான நிலையில் 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காங்கயம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது - ஒருவர் உடல் கருகி பலி
Published on

காங்கேயம்:

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று காங்கயம் வழியாக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தாராபுரத்தில் இருந்து காங்கயம் நோக்கி தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான தேங்காய் தொட்டிகள் ஏற்றும் லாரி ஒன்று வந்துள்ளது.

ஊதியூர் அருகே 2 லாரிகளும் வேகமாக வந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. 2 லாரிகளும் மோதிய வேகத்தில் ஒரு லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் தீயானது 2 லாரிகளுக்கும் பரவியுள்ளது.

அப்போது பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 லாரிகளில் இருந்த 3 பேர் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் இடிபாடுகளில் இருந்து வெளியேற முடியாததால் மைசூரில் இருந்து இருசக்கர வாகனம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன்(50) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேங்காய் தொட்டி ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார்த்தி (26) மற்றும் அவருடன் பயணித்த வடமாநில தொழிலாளி ரோமிலால் (18) ஆகிய 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காங்கயம் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலும் அனைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com