சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் வந்திறங்கிய 2 பிரமாண்ட சரக்கு விமானங்கள்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பிரமாண்ட சரக்கு விமானங்கள் வந்திறங்கி சரக்குகளை ஏற்றி, இறக்கி சென்றன.
 சரக்கு விமானங்கள்
Published on: 

பிரமாண்ட விமானங்கள்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கக முனையத்தில், சுமார் 150 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 'போயிங் 747' ரகத்தைச் சேர்ந்த 2 பிரமாண்ட சரக்கு விமானங்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து தரையிறங்கி, சரக்குகளை ஏற்றி இறக்கிவிட்டுச் சென்றன.அதன்படி வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து ஏர் அட்லாண்டா ஐஸ் லாண்டிக் நிறுவனத்தால் இயக்கப்படும் நெட்வொர்க் ஏவியேஷன் சரக்கு விமானம் சென்னை விமான நிலையம் வந்தது.

ஹாங்காங் புறப்பட்டது

அந்த விமானம் தரை இறங்குவதற் காக, சரக்கக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற விமானங்களை, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றினர்.இதையடுத்து, விமானத்தில் கொண்டு வரப்பட்ட சரக்குகள் இறக்கப்பட்டு, வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் விமானத்தில் ஏற்றப்பட்டன. பின்னர் அந்த விமானம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றது.

மற்றொரு விமானம்

அதை தொடர்ந்து, சர்வதேச சரக்கு போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன் ஏர் நிறுவனத்தின் 'போயிங் 747' ரக சரக்கு விமானம், தாய்லாந்தின் ராயோங் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்தது. இந்த விமானத்திலும் சரக்குகள் இறக்கி, ஏற்றப்பட்ட பின்னர் சீனாவின் எசோவ் நகர விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

ஊழியர்கள் உற்சாகம்

ஒரே நாளில் 2 பிரமாண்ட சரக்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி இயக்கப்பட்டதால், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சரக்கக ஊழியர்கள் உற்சாகமடைந்தனர். சர்வதேச சரக்கு போக்குவரத்தில் சென்னை விமான நிலையம் முக்கிய மையமாக விளங்குவதற்கு இதுபோன்ற பிரமாண்ட சரக்கு விமானங்களின் வருகை சான்றாக அமைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com