ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

அஞ்சலை ஆடு காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அம்பலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அஞ்சலை அதே பகுதியில் உள்ள வழக்கறிஞர் சுல்தான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த போது ஒரு செம்மறி ஆடு காணாமல் போனது.
அதனை தொடர்ந்து அஞ்சலை ஆடு காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 14 ஆம் தேதி அஞ்சலை ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த இடத்தில், இருந்த சிசிடிவி காட்சிகளை பகுதி மக்கள் ஆய்வு செய்த போது, அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சுல்தான் தனது நண்பரான திருமலை என்பவருடன் சேர்ந்து அஞ்சலையின் ஆட்டை காரில் திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
அதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுல்தானை அவரது இல்லத்திலேயே சிறைபிடித்து பின்னர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற நகர போலீஸார் சுல்தான் மற்றும் திருமலை ஆகிய இருவரை கைது செய்து, ஆடுகளை திருட பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த ஆடுகளை வழக்கறிஞர் தனது நண்பருடன் காரில் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






