நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் வில்லியம் லேஅவுட் 2-வது தெருவை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை பிரமிளா (52). இவரது கணவரான கமல், நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரமிளாவை விட்டு கமல் பிரிந்து சென்றார். இதனால் வாடகை வீட்டில் சுசீந்திரனும், பிரமிளாவும் வசித்து வந்தனர். போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் வறுமையில் வாடினர்.

இந்த நிலையில் சுசீந்திரன் வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே போலீசார், கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு தனித்தனி அறைகளில் சுசீந்திரனும், பிரமிளாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன. கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் சுசீந்திரன், பிரமிளா ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடித்ததில், வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களின் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. வீட்டுக்கு வாடகை செலுத்தமுடியவில்லை.

எனவே வீட்டிலுள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு வழங்கிவிடுங்கள். எங்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா, பிரமிளாவுக்கு பணம் உதவி செய்து வந்துள்ளார். ஆனால் அவர் இறந்த பின்பு வேறு யாரிடம் இருந்தும் பண உதவி கிடைக்காததால் பிரமிளாவும், சுசீந்திரனும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com