தொழிலாளியிடம் ரூ.1,700 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது

தொழிலாளியிடம் ரூ.1,700 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளியிடம் ரூ.1,700 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது
Published on

கோவை,

கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு காந்தி பார்க் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த வெறைட்டி ஹால் ரோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் (56), ஸ்ரீதரை தடுத்து நிறுத்தினார்.

அப்போது ஸ்ரீதர் குடிபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை இருளப்பன் பறிமுதல் செய்தார். அதை, மறுநாள் வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ரூ.1,700 லஞ்சம்

அதன்படி ஸ்ரீதர், தனது மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், கணேசன் ஆகியோரிடம் மோட்டார் சைக்கிளை கேட்டார். அதற்கு அவர்கள், உன் மீது வழக்கு போட்டால் கோர்ட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். எனவே வழக்கு போடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு தன்னால் ரூ.1,700 தான் தர முடியும் என்றும், அந்த பணத்தை கொண்டு வருவதாக கூறி விட்டு ஸ்ரீதர் வெளியே வந்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீதர், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

2 சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது

பின்னர் அவர்கள் கொடுத்த யோசனைப்படி, நேற்று காலை ஸ்ரீதர் வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோரிடம் ரூ.1,700-ஐ வழங்கினார்.

அதை வாங்கிய போது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரையும் அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com