

புதுச்சேரி
சுருக்குமடி மீன்பிடி வலை விவகாரத்தில் புதுச்சேரி அருகே இரு கிராம மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டனர். கடற்கரையில் பதற்றம் நிலவியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சுருக்குமடி வலை
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும், அதை ஒட்டிய நல்லவாடு பகுதி மீனவர்களுக்கும் இடையே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் மோதல் இருந்து வருகிறது.
வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் நல்லவாடு கிராம மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவ்வப்போது இருதரப்பு மீனவர்களும் மோதிக்கொள்ளும் சம்பங்கள் நடந்து வருகின்றன.
நடுக்கடலில் தகராறு
இதையொட்டி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வீராம்பட்டினம் மீனவர்களும், சுருக்குமடிக்கு அனுமதி அளிக்க கோரி நல்லவாடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மீனவர்களும் போராட்டம் நடத்தி அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இந்தநிலையில் நல்லவாடு மீனவர்கள் சின்ன வீராம்பட்டினம் ஒட்டிய பகுதிக்கு வந்து நடுக்கடலில் சுருக்குமடியை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தெரிகிறது.
இதற்கு அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பு மீனவர்களும் நடக்கடலில் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
இந்த தகராறு முற்றி படகோடு படகை மோதச் செய்து சேதப்படுத்தினர். இதில் ஆத்திரமடைந்து நாட்டு வெடிகுண்டு வீசியும், சுளுக்கி, துடுப்பு, கட்டை, தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகுகளில் இருந்தபடியே ஒருவரை ஒருவர் தாக்கி மேதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
நடுக்கடலில் மீனவர்கள் மேதிக் கொண்ட விவகாரம் தகவலறிந்து இருகிராம மீனவர்களும் தங்களை சேர்ந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சுளுக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படகு மூலமும், கடற்கரை வழியாக நடந்தும் சென்றனர். இதுதவிர வீராம்பட்டினம் கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்களும், நல்லவாடு மீனவர்களும் நூற்றுக்கணக்கானேர் தங்களது கடற்கரையிலும் ஆயுதங்களுடன் திரண்டனர். இதனால் இந்த கடற்கரை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
துப்பாக்கி சூடு
இதுபற்றி தகவல் அறிந்து புதுக்குப்பம் பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கொடாரா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன், தெற்கு போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் தலைமையில் தவளக்குப்பம், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், போலீசார் நூற்றுக்கணக்கானோர் கடற்கரை பகுதிகளில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கடற்கரை பகுதியில் அவர்கள் ரோந்து சென்று மோதல் நடந்த பகுதியில் இருந்த மீனவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்த நிலையில் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
போலீஸ் அணிவகுப்பு
உடனே அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் மீனவர்களிடையே மோதல் ஏற்படுவது தடுக்கப்பட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் நிலைமையை போலீசார் கட்டுக்கள் கொண்டு வந்தனர்.
வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் நல்லவாடு, புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
நல்லவாடு கிராமத்தில் ஒரு பகுதி புதுச்சேரி, ஒரு பகுதி தமிழ்நாடு என்பதால் அங்கு தமிழக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து வருவதுடன், கலவரத்தை ஒடுக்கும் வகையில் போலீஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.