

சென்னை,
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்திற்கு வந்த மூன்று பேர், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்களை லோடு வாகனத்தில் ஏற்றி தப்பிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டது அதே காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய காவலர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. காவலர் வேல்முருகன் தற்போது அடையாறு காவல் நிலைய பணிப் பிரிவின் கீழ் நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டு பாதுகாப்புப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, காவலர் வேல்முருகனை துரைப்பாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரோடு துரைப்பாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்திவரும் முத்துப்பாண்டி மற்றும் அவரது கடை ஊழியர் ஜாகிர் உசேன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் விசாரணையில், காவலர் வேல்முருகன் கையில் பணமில்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து காவல் நிலைய வாகனங்களையே திருடி, சென்னை புதுப்பேட்டையில் விற்று வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கடத்தல் வாகனங்களை விற்றதன் மூலமாக ஆகஸ்ட் மாதம் ரூ.16,000 மற்றும் செப்டம்பர் மாதம் ரூ.18,000 பெற்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையே, வாகனத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.