சர்க்கரை ஆலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி

இந்த உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்க்கரை ஆலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த படமாத்தூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் கரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த மோகனசுந்தரம்(வயது35), சிவகங்கையை சேர்ந்த பொன்னழகு(58) ஆகியோர் ஆலையில் உள்ள மொலாசஸ் என்ற திரவப்பொருளுக்கான தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக மோகனசுந்தரம் முதலில் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது அதில் இருந்து வெளியான விஷவாயு அவரை தாக்கியது. இதில் அவர், உள்ளேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னழகு அவரை காப்பாற்ற உள்ளே இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் அவரும் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் தொட்டிக்குள் தொட்டியில் இருந்த விஷவாயுவை வெளியேற்றி 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மோகனசுந்தரம், பொன்னழகு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து உயிரிழந்த இருவரின் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்தனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, வேலைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர்கள், சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்தனர். தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com