50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு

உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. #Government #TNnews
50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதை எளிமையாக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் (மொபட் அல்லது ஸ்கூட்டர்) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதை செயல்படுத்தும்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இத்திட்டத்தினை செயல் படுத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா பிறந்த நாளில்

ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற பிப்ரவரி 24-ந் தேதி முதல், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. பணிபுரியும் மகளிர் மற்றும் திருநங்கையர் அவர்களுக்கு ஏற்றவகையில் கியர் இல்லாத, ஆட்டோ கியர் 125 சி.சி. திறனுக்கு மிகாமல் இருக்கும் இருசக்கர வாகனத்தை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம்.

தங்களது சொந்த நிதி அல்லது வங்கிகள் மூலமாக கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம். வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கும். வாகனத்தை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு யாருக்கும் மாற்றவோ, விற்கவோ கூடாது.

யார்-யாருக்கு தகுதி?

சுயதொழில் புரிபவர், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசாங்க நிதி உதவிபெறும் நிறுவனங்கள், அரசாங்க தொழில் திட்டங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், மக்கள் கற்றல் மையம்) தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், வங்கி வழிநடத்துனர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பில் பதிவு செய்த மகளிர் போன்றோர் மானியம் பெற தகுதியுடையவர்கள்.

தொலைதூரங்கள், மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள், மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை, 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கையர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆண்டு வருமானம்

ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். பயனாளி 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேற்று முதல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்கப் படுகிறது. விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட அலுவலகங்களிலேயே நேரடியாகவோ அல்லது விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உள்ள தேர்வுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர் தனது சொந்த நிதியில் வாகனத்தை வாங்கினால், வாகன பதிவிற்கான சான்றை பயனாளி அளித்த பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும்.

நேரடியாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ பயனாளி முதலில் வாகனத்தை வாங்கி, அதற்கான மானியத்தை கோரும் விண்ணப்பத்தை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள்?

பயனாளிகள் விண்ணப்பத்துடன் இருப்பிடத்திற்கான ஆவணம், வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணம், வருமான சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அமைப்புச்சாரா நல வாரியத்திலிருந்து பெற்ற அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அத்துறையிடமிருந்து பெற்ற அடையாள அட்டை, பணிபுரிவதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com