

சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு போன்றவை இன்னும் முழுமை அடையவில்லை என்ற போதிலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த 17-ஆம் தேதி திமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது. தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நேற்று 24-ந் தேதி வரை விருப்ப மனுக்களை வாங்கி வாங்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.
இந்த மனுக்களை பூர்த்தி செய்து திமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பலர் மு.க.ஸ்டாலின் பெயரிலும், உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது விருப்பமனுவை திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பரிசீலனை செய்து வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.