திருமண விழாவில் ஒரே மேடையில் உதயநிதி, சீமான்... கட்டியணைத்து நலம் விசாரிப்பு

சிறுபான்மை மக்களுக்கு காவல் அரணாக திமுக நிற்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருமண விழாவில் ஒரே மேடையில் உதயநிதி, சீமான்... கட்டியணைத்து நலம் விசாரிப்பு
Published on

சென்னை,

திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின், சீமான் கலந்து கொண்டனர்.

திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜாவின் இல்லத் திருமண விழா இன்று சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இரு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், விழாவில் கலந்துகொள்ள இருவரும் வருகை தந்தனர்.

ஒரே மேடையில் உதயநிதி, சீமான்...

திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், சீமானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி இருவரும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துத் தங்களது அன்பைப் பரிமாறி நலம் விசாரித்துக் கொண்டனர். சீமானை பார்த்ததும் அவர் கைகளை பற்றியபடி நாற்காலியில் அமர உதயநிதி அழைத்துச்சென்றார். பின்னர் இருவரும் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அருகருகே அமர்ந்து சிரித்து கொண்டே சிறிது நேரம் உரையாடினர்.

பொதுக்கூட்டங்களிலும் ஊடகங்களிலும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பு மற்றும் அவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சீமானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

காவல் அரணாக திமுக

திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

இஸ்லாமியர்களுக்கும் கழகத்துக்கும் இடையிலான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது; யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் காவல் அரணாக திமுக நிற்கும்.

சிலர் சோபா வந்தவுடன் திமுகவை விட்டுச் சென்றுள்ளனர்; தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக உள்ளது தவெக அரசு. தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் பேரழிவில் இருந்து தமிழ்நாட்டை திமுகவும், மு.க.ஸ்டாலினும் நிச்சயம் மீட்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com