ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் ஆனந்த்குமார் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை,
உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்த தமிழக ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார்.
மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார். தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite) திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை 25 லட்சம் ரூபாயை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு இத்திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை முதல்-அமைச்சர் 12-ல் இருந்து 25-என இரட்டிப்பாக உயர்த்தியுள்ளார்.
மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு (MIMS) திட்டத்தின் கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்து நிதியுதவியை 10 இலட்சம் ரூபாயில் இருந்து இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகின்றார்.
MIMS திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ஸ்கேட்டிங் வீரர் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் சீனாவின் பெய்டைஹேயில் செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றார்.
ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலி, தென் கொரியா மற்றும் கொலம்பியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளின் வீரர்கள் மட்டுமே பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆனந்த்குமார் வேல்குமார் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தைப் வென்று வரலாறு படைத்தார்.
சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலகின் 47 முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஆடவருக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் தமிழ்நாட்டின் ஆனந்த்குமார் வேல்குமார் இலக்கை 1.24.924 என்ற சாதனை நேரத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும், உலகின் 159 முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஆண்களுக்கான 42.195 கி.மீ. மாரத்தான் போட்டியில் 58.29.747 என்ற சாதனை நேரத்தில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தொடர்ந்து ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் 39 முன்னணி வீரர்கள் பங்கேற்ற 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் இலக்கை 43.072 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்ததுடன் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதங்கம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு திட்ட வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலிமை இன்று (25.9.2025) சந்தித்து விளையாட்டுகளில் வென்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஸ்கேட்டிங் வீரரின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






