ரூ.152.45 கோடியில் கட்டப்பட்டுள்ள 852 குடியிருப்புகளை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

852 குடியிருப்புகளை திறந்து குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ரூ.152.45 கோடியில் கட்டப்பட்டுள்ள 852 குடியிருப்புகளை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் கலைஞரால் 1973 ஆம் ஆண்டு தரை மற்றும் 4 தளங்களுடன் தலா 326 சதுர அடியில் கட்டப்பட்ட 302 குடியிருப்புகளும், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் 1982 ஆம் ஆண்டு தரை மற்றும் 2 தளங்களுடன் தலா 240 சதுர அடியில் கட்டப்பட்ட 84 குடியிருப்புகளும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை திட்டப்பகுதியில் 1979 ஆம் ஆண்டு தரை மற்றும் 3 தளங்களுடன் 232 சதுர அடியில் கட்டப்பட்ட 392 குடியிருப்புகளும் சிதிலமடைந்த நிலையில் இருந்தன.

இந்த குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 திட்டப்பகுதிகளுக்கும் புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

அதனடிப்படையில் கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 61.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 14.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 78 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 77.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம் 3 திட்டப்பகுதிகளில் 152.45 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் முடிவுற்றன.

இந்த புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.2.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, காக்ஸ் குடியிருப்பு, நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை ஆகிய திட்டப் பகுதிகளில் மொத்தம் 152.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 852 குடியிருப்புகளை திறந்து குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டை திருவள்ளூவர் நகர் பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க 73.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 377 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 196 திட்டப் பகுதிகளில் 68,759 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடித்து, திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ந.பிரியா ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் சிவ ராஜசேகரன், ரா.ஜெகதீசன், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர் , மேற்பார்வை பொறியாளர் இளம்பரிதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com