

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டிலும், நிலம் கையப்படுத்தும் பணிக்காக ரூ.92.91 கோடி செலவில் என மொத்தம் ரூ.135.62 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூரில் புதிய பாலம், ரூபாய் 2.71 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், ரூபாய் 4.88 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் குளம் என மொத்தம் ரூபாய் 143.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் குளம்:-
வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151, எஸ்.வி.எஸ். நகர் முதல் பிரதான சாலையில் ரூ.4.88 கோடி மதிப்பீட்டில் 16,396.13 சதுர மீட்டர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா எஸ்.வி.எஸ். நகர் முதல் பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 11,454.03 சதுர மீட்டர் பரப்பளவில் நீர் பரப்பளவு, குளத்தின் மையப் பகுதியில் பறவைகள் தீவு, நடைபாதை, கூழாங்கற்கள் மற்றும் கரடுமுரடான தரைத்தளத்தை கொண்ட ரிஃப்ளெக்சாலஜி நடைபாதை, உள்ளூர் வகை மரங்கள், செடிகள் மற்றும் புல்வெளிகளுடன் பசுமைப் பரப்பு, வெளிப்புற உடற்பயிற்சிக் கூடம், சிறிய கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திறந்தவெளி திரையரங்கம், ஓற்வெடுப்பதற்காக சிறிய நிழற்குடை (கேஸேபோ), பாலம், சுற்றுச்சுவர், வாகன நிறுத்துமிடம், நுழைவாயில் பிளாசா, படகு சவாரி தளம், இருக்கைகள், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு வசதிகள், கண்காணிப்புக் கேமராக்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், பராமரிப்பாளர் மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சின்ன போரூர் மருத்துவமனை சாலை - கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்:-
வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட சின்ன போரூர் மருத்துவமனை சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.2.71 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகம்6,160 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் நூலகம், முதல் தளத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில், கழிப்பறை, பராமரிப்பாளர் அறை மற்றும் பாதுகாப்பு காவலர் அறை, நூலக உள்ளடக்கிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் 863 சதுர அடி பரப்பளவில் அழகு பயிற்சி மையம், 1100 சதுர அடி பரப்பளவில் தையல் பயிற்சி மையம், இருசக்கர வாகன நிறுத்துமிடம், கார் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் மூலம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குடிமைப் பணிக்கு தயாராகும் மாணவர்கள், முதியவர் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சின்ன நொளம்பூரில் உயர்மட்டப் பாலம்:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின்படி, 2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மழைக்காலங்களில் கூவம் ஆற்றின் குறுக்கே தற்போதுள்ள தரைப்பாலம் முற்றிலும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததால், இத்தரைப்பாலத்திற்கு மாற்றாக கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144க்குட்பட்ட கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து, யூனியன் சாலையை சிரமமின்றி அடைவதற்கு
ஏதுவாக, நான்கு வழிப் பாதையாக சின்ன நொளம்பூரில் 245 மீ. நீளம் மற்றும் 20.70 மீ. அகலத்தில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து யூனியன் சாலையை இணைக்கும் வகையில் இருவழிப் பாதையாக சன்னதி முதல் குறுக்குத் தெருவில் 273 மீ. நீளம் மற்றும் 12 மீ. அகலத்தில் ரூ.31.65 கோடி மதிப்பீட்டிலும் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144க்குட்பட்ட சன்னதி முதல் குறுக்குத் தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தினை துணை முதல்-அமைச்சர் 26.09.2025 அன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது சின்ன நொளம்பூரில் மாநகராட்சியின் சார்பில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டிலும், நிலம் கையப்படுத்தும் பணிக்காக ரூ.92.91 கோடி செலவில் என மொத்தம் ரூ.135.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் இன்று துணை முதல்-அமைச்சரால் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூரில் ஏற்கனவே இருந்த தரைப்பாலம் மிகவும் தாழ்மட்டம் கொண்டதாகவும், குறுகிய அகலத்துடனும் இருந்தது. இதனால் மழைக்காலங்களில் இத்தரைப்பாலம் நீரில் மூழ்கி நொளம்பூர், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு செல்வதற்கு பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது.
எனவே, இத்தரைப்பாலத்திற்கு மாற்றாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய நான்கு வழிப்பாதை கொண்ட உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் நீளம் 245 மீட்டர் மற்றும் அகலம் 20.70 மீட்டர் ஆகும். இதனால் மதுரவாயல், நொளம்பூர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
அடிக்கல் நாட்டு விழா:-
வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143, ஓம்சக்தி நகர் புதிய பாலம் முதல் நொளம்பூர் யூனியன் சாலை மயானபூமி வரையிலான கூவம் ஆற்றங்கரையில் 490 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் அடையாளம்பட்டு சர்வீஸ் சாலை முதல் நொளம்பூர் சாணக்கிய பிரதான சாலை சந்திப்பு வரையிலான 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு 25 அடி சாலையாக உள்ள யூனியன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 40 அடி அகலத்திற்கு புதிய தார்சாலையாக சாலையினை அகலப்படுத்தும் பணி ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் நொளம்பூர் மற்றும் முகப்பேர் மேற்கு பகுதிகளில் வசிக்கும் வாகன ஓட்டிகள் எளிதில் பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்வதற்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து நொளம்பூர் மற்றும் முகப்பேர் மேற்கு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்கு வழிவகை ஏற்படும்.