

திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக லால் குடி நகரை அணுகுவது அத்தியாவசிய தேவை யாக உள்ளது. லால்குடியில் தற்போது உள்ள காமராஜர் பஸ் நிலையத்துக்குள் நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. போதிய இடவசதி இல்லாததால் புறநகர் பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வராமல் சென்றுவிடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று லால்குடி அரியலூர் நெடுஞ்சாலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கலைஞர் மேம்பட்டு திட்டத்தின் கீழ் 5.32 ஏக்கர் பரப்பளவில் ரூ.31 கோடியே 89 லட்சத்தில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்ட கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினர். தற்போது, பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய பஸ்நிலையம், நகராட்சி அலுவலகத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த பஸ் நிலையத்தில் 40 பஸ் நிறுத்தங்கள், 120 கடைகள், 2 ஓட்டல்கள், 2 ஏ.டி.எம். மையங்கள், டிரைவர்கள் தங்குமிடம், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம், 62 கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் பீட், 2 கட்டண கழிப்பறை மற்றும் 2 இலவச கழிப்பறை என 4 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.