ரூ.5.01 கோடியில் சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

ரூ.10.32 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகையினை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.5.01 கோடியில் சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.03.2026) ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகையினையும், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெரு சென்னை தொடக்கப் பள்ளியில் ரூ.5.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடத்தினையும் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தியின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 10.32 கோடி மதிப்பீட்டில் கலைஞர் திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது.

இந்த திருமண மாளிகை 19,528 சதுர அடி கொண்டதாகும். தரைத்தளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், நவீன சமையற்கூடம் மற்றும் 125 நபர்கள் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கான வசதிகளும், குளிரூட்டப்பட்ட 350 நபர்கள் இருக்கைகள் கொண்ட திருமணம் நடைபெறும் தளம், மணமகன் அறை, மணமகள் அறை, 8 தங்கும் அறைகள், 13 நபர்கள் செல்லும் வகையிலான மின்தூக்கி வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கலைஞர் திருமண மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.

திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெரு, சென்னை தொடக்கப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 நிதியின் கீழ் ரூ.5.01 கோடி மதிப்பீட்டில் 17,186 சதுர அடி பரப்பளவில் புதிதாக பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடமானது தரைத்தளத்தில் 7 வகுப்பறைகள் மற்றும் 5 கழிவறைகள், முதல் தளத்தில் 7 வகுப்பறைகள் மற்றும் 5 கழிவறைகள், இரண்டாம் தளத்தில் பொது அறை, 4 வகுப்பறைகள் மற்றும் 5 கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் தொடக்கப் பள்ளியில் 232 மாணவர்களும், சென்னை உயர்நிலைப் பள்ளியில் 398 மாணவர்கள் என மொத்தம் 630 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பின்னர், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் இப்பள்ளியில் பயிலும் 630 மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (ராயபுரம்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், வட்டார துணை ஆணையாளர்கள் எச். ஆர். கௌஷிக், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் மு.சரவணன், அம்பேத்வளவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com