

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் 21.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தண்டையார்பேட்டை பேருந்து நிலையம், புது வண்ணாரப்பேட்டையில் 19.70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆர்.கே. நகர் விளையாட்டு வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம்:
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் அமைந்துள்ள மாதவரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியானது 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது. தற்போது வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 12.39 கோடி ரூபாய் செலவில் 43,560 சதுர அடி மொத்த பரப்பளவில் 37,342 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் சென்னை நடுநிலைப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக் கட்டடத்தில் 27 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, பதிவு அறை, 2 ஆய்வகங்கள் (அறிவியல் மற்றும் கணினி) உடற்கல்வி கூடம், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சேமிப்பு அறை, ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், 45,500 லிட்டர் கொள்ளவு கொண்ட கீழ்நிலை நீர்த் தொட்டி, 31,590 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி, 13,260 லிட்டர் கொள்ளவு கொண்ட தீயணைப்பு மேல்நிலை தொட்டிகள், 93,100 லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவு நீர்த் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை பேருந்து நிலையம்
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை பேருந்து நிலையமானது வடசென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது. இந்த பேருந்து நிலையம் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 21.95 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் 15 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 25 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, 157 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மின் தூக்கி, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேமிப்பு தொட்டி, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் சேமிப்பு தொட்டி என நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையத்தில் உணவகங்கள், ஏடிஎம் மையம், 3 கடைகள், மாதாந்திர பயண சீட்டுகள் வழங்கும் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகளுக்கு இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிடங்கள், பணிமனை அலுவலகம், பயிற்சி கூடம், கட்டுபாட்டு அறை, கணினி பிரிவு, காத்திருப்பு கூடம், பொது மேலாளர் அறை, பேருந்து நிலைய மேலாளர் அறை, சிசிடிவி கண்காணிப்பு வசதி, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட தங்குமிடங்கள், பாதுகாப்பு பெட்டகம், குளியல் மற்றும் ஒப்பனை அறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் விளையாட்டு வளாகம்
ஆர்.கே. நகர் விளையாட்டு வளாகமானது 37,157 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு வளாகத்தில் 60 எண்ணிக்கை 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், 50 எண்ணிக்கை 2 சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் இடம், 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட நீர் சேமிப்பு தொட்டி, 33,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, வெளிப்புற உடற்பயிற்சி கூடம் மற்றும் திறந்தவெளி அரங்கத்துடன் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தரை தளத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தில் ஒரு கூடைப்பந்து விளையாட்டு மைதானம், 2 எண்ணிக்கையிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டு பகுதி, உடற்பயிற்சி கூடம், முதலுதவி அறை, நிர்வாக அறை, உணவு கூடம், மின்சார அறை, மின்தூக்கி வசதி, உபகரணங்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டக அறை, குளியல் மற்றும் ஒப்பனை அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தில் 2 குத்துச்சண்டை மைதானங்கள், குளியல் மற்றும் ஒப்பனை அறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் வளாகத்தின் மேற்பகுதியில் 10 KV திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபிநேசர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் சந்திர சேகர் சாகமூரி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் த.பிரபுசங்கர், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர்கள் எஸ்.நந்தகோபால், நேதாஜி யு.கணேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.