வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன உடற்பயிற்சி கூடம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதை பார்வையிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடங்கள் குளிரூட்டப்பட்டு, புதிய உபகரணங்கள் வாங்கி பொருத்திடவும், நவீன முறையில் சீரமைக்கவும் 9 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வகையான அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி ஏ.ஜி.பி.நீச்சல் குள வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் விடுதியில் தங்கியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டு வீராங்கனைகளுக்கான விடுதியில் அவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு, மேலும் அவர்கள் பெற்று வரும் பயிற்சி குறித்தும், கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் குறித்தும் கலந்துரையாடி, பதக்கங்கள் வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.
நீச்சல் குள வளாகத்தில் பல்வேறு உயரங்களில் இருந்து வெவ்வேறு முறைகளில் டைவ் அடித்து நீருக்குள் குதிக்கும் விளையாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதையும் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






