

தஞ்சை,
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டனர். தஞ்சையில் ஏராளமானோர் திரண்டு கூட்டம் அதிகமானதால் செங்கிப்பட்டியில் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்தார்.
இந்தநிலையில், சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் திருச்சி வழியாக செங்கிப்பட்டியை தாண்டி சென்றபோது திடீரென யூடர்ன் எடுத்து கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீசார் அழைத்து சென்றனர்.
தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் உதயநிதி செங்கிப்பட்டி அழைத்தனர். விசாரணைக்காக அழைத்துவரப்பட்டுள்ள காவல் வாகனத்தை விட்டு இறங்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மறுப்பு தெரிவித்தார்.
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது. வழக்கு பதியப்பட்டுள்ள தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் என கூறினார்.
செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி போலீஸ் வாகனத்தை விட்டு இறங்க மறுப்பு தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு ஐஜி பாலகிருஷ்ணன் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உதயநிதி தெரிவித்தார்.
சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி ஸ்டாலின் போலீஸ் வாகனத்தை விட்டு இறங்கி தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.
உதயநிதியை அழைத்துவந்த நிலையில் செங்கிபட்டி காவல் நிலையம் முன்பு போலீசாரோடு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
முன்னதாக,திட்டத்தை மாற்றி வேறொரு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வது ஏற்புடையதல்ல. தஞ்சை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பதுதான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என மா.சுப்பிரமணியன் கூறினார். தஞ்சை நகர காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் மீது திமுகவினர் கல்வீச்சு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.