

திருச்சி
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கோண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக தலைவர் தினமும் ஒரு மாவட்டத்திற்கு சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனையை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு தொகுதியாகச் சென்று நானும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை சொல்லி பிரசாரம் செய்து வருகிறேன். வருடம் முழுக்க மக்களோடு இணைந்து இனிகோ இருதயராஜ் பயணித்து வருகிறார்.
"நாம் மற்றவர்கள் மாதிரி பிரேக் விட்டு பிரசாரம் செய்யவில்லை. சில பேர் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே சோர்வாக இருக்கிறார்கள். ஆனால் நாம் ரெஸ்ட் எடுக்காமல் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறோம்". கொரோனா காலத்தில் திமுக உடன்பிறப்புகள் களத்தில் இறங்கி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார்கள். இனிகோ இருதயராஜ்-க்கு சென்னையிலும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் சென்னையில் உள்ள தொகுதியில் கூட நின்றிருக்கலாம், அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் என்று நிற்காமல் ஒட்டு மொத்த திருச்சி கிழக்கு மக்களின் மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதியில் நான் போட்டியிடுவதாக சில தற்குறி கூட்டங்கள் பேசி வருகிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஒரு தொகுதிதான் என்பது கூட தெரியாத தற்குறி கூட்டத்திடம் நான் என்ன பேசி புரிய வைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.