அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் : மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யுஜிசி


அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் : மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யுஜிசி
x

இதுதொடர்பாக மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை யு.ஜி.சி. வழங்கி உள்ளது.

சென்னை,

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கல்வி ஒத்துழைப்பு, இரட்டை பட்டம், இரட்டை பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குதல் விதிமுறைகள்-2022 மற்றும் இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல் விதிமுறைகள்-2023 தொடர்பாக 2023-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி வெளியிட்டது.

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், பல உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், படிப்புகளை வழங்குபவர்களுடன் கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதும், அந்த நிறுவனங்கள், கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், படிப்புகளை வழங்குபவர்களிடம் இருந்து பட்டங்களை வழங்குவதை எளிதாக்கி வருவதும் யு.ஜி.சி.யால் கவனிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யு.ஜி.சி. இதுதொடர்பாக சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சில தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் முறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ திட்டங்களை வழங்குவது தொடர்பாக செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரங்களை வழங்கி வருகின்றன.

எனவே, இதுபோன்ற எந்தவொரு ஒத்துழைப்பும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும், அதன்படி, அத்தகைய ஒத்துழைப்பு, ஏற்பாட்டுக்கு பிறகு வழங்கப்படும் பட்டங்களும் யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

அவ்வாறு செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், பொதுமக்கள் மீண்டும் ஒருமுறை உரிய எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story