

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி மூன்றாம் நாளான இன்று தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு இருபுறமும் திருகுடைகளை கோவில் பட்டாச்சாரியார்கள் பிடிக்கும் நிலையில் சுவாமியை சுமந்து செல்லும் பாதம் தாங்கிகள் அவ்வப்போது கருட வாகனத்தை குலுக்குவது வழக்கம்.
அந்த வகையில் பாதம் தாங்கிகள் தங்க கருட வாகனத்தை குலுக்கிய போது திருக்குடைளை பிடிக்க முடியாமல் கோவில் பட்டாச்சாரியார்கள் தவறவிட்டனர்.
கருட சேவை வீதி உலாவின் போது செட்டி தெரு,திருகச்சி நம்பி தெரு,கச்சபேஸ்வரர் கோவில் சந்திப்பு ஆகிய இடங்களில் திருக்குடைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் கருட சேவை உற்சவத்தில் திருக்குடைகள் சரிந்து விழுந்த சம்பவத்தால் ஏதேனும் தீங்கு நேருமோ என பக்தர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.