கணவர் இறந்த துக்கம் தாங்காமல்.. 6 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் கவலையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல்.. 6 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு
Published on

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் நீலகண்டன். டிரைவரான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவிதா(வயது 23) என்பவருடன் திருமணம் ஆனது. நீலகண்டன் கடந்த 1 வருடத்திற்கு முன்பு பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உடல்நிலை மோசமானதால் கடும் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நீலகண்டனின் மனைவி கவிதா கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காலையில் பாடாலூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு மதியம் வந்தார். அப்போது வீட்டில் நீலகண்டன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது கவிதா கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது வள்ளுவன் என்கிற அந்த 6 மாத கைக்குழந்தையுடன் தனது அண்ணன் கலியபெருமாள் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கவிதா கவலையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை தெரணியில் உள்ள கணவர் நீலகண்டன் வீட்டிற்கு கவிதா குழந்தையுடன் சென்றார். அப்போது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வீட்டின் அறைக்கு சென்ற கவிதா தனது உடலிலும், குழந்தையின் உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அப்போது 2 பேரின் உடல்கள் முழுவதும் தீ பரவியதால் கவிதாவும், குழந்தையும் வலியால் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இருவர் மீதும் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதில் பலத்த தீக்காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com