மெட்ரோ பால தூண்களில் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றம்!

31 விளம்பர பலகைகள் ஓராண்டிற்கு வைத்திட உரிமக் கட்டணமாக ரூ.35.73 லட்சம் மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டது.
மெட்ரோ பால தூண்களில் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றம்!
Published on

சென்னை,

ஆலந்தூர் மண்டலம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் பாலத்தின் தூண்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினைத் தொடர்ந்து, 31 விளம்பரப் பலகைகள் ஓராண்டிற்கு வைத்திட அனுமதிக்கான உரிமக் கட்டணமாக ரூ.35,73,314/- தனியரால் சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

விளம்பர பலகைகள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஆலந்தூர் மண்டலம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் பாலத்தின் தூண்களில் முத்ரா (Mudra) நிறுவனத்தால் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 31 விளம்பரப் பலகைகளுக்கு, 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான உரிமக் கட்டணம் செலுத்தாமல் வைக்கப்பட்டிருந்ததை முன்னிட்டு, அந்த விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கையினை பெருநகர சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார ஆணையாளர் அதாப் ரசூல் அறிவுறுத்தலின்படி, ஆலந்தூர் மண்டல அலுவலர்களால் நேற்று (23.06.2026) மேற்கொள்ளப்பட்டது.

அனுமதி பெற வேண்டும்

இதனைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தினர் உடனடியாக, இந்த பாலத்தின் 16 தூண்களில் 31 விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கான உரிமக் கட்டணமாக ரூ.35,73,314/-னை சென்னை மாநகராட்சிக்கு செலுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளுக்கு உரிமக் கட்டணம் செலுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்று வைக்கப்பட வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து, விளம்பரப் பலகைகள் அகற்றி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com