வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

2017-ம் ஆண்டு டிசம்பா 31-ந் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவுசெய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200-ம், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப ஆண்டு வருமானம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதரவகுப்பினராயின் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

பதிவு செய்து 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமானம் மற்றும் வயது உச்சவரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம்.

அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்க கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் விண்ணப்பபடிவத்தை - (https;//tnvelaivaaippu.gov.in or www.tnvelaivaaippu.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

28-ந்தேதி கடைசி நாள்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் அடுத்த மாதம்(பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை தொடங்கிய காலத்தில் இருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com