பந்தல்குடியில் தடையில்லா மின்சாரம்

பந்தல்குடியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
பந்தல்குடியில் தடையில்லா மின்சாரம்
Published on

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பந்தல்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பத்ரிநாத் வரவேற்றார்.

கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:- பந்தல்குடி கிராமத்தில் என்னென்ன பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன பணிகள் கிராமத்திற்கு தேவை என்பதனை கிராம மக்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. விரைவில் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிராமத்திற்கு செய்து தரப்படும்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை இதுவரை 1 கோடியே 6 லட்சம் பேர் பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையினை 38 லட்சம் பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையில் வந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் பந்தல்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான வழிவகை செய்யப்படும். பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கென்று தனி வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தருவதற்கும், கிராம மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க கூடுதல் மின் மாற்றிகள் அமைக்கவும், ஊராட்சிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி இயக்குனர் (மகளிர்) விசாலாட்சி, தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜா மைதீன் பந்தே நவாஸ், சூரியகுமாரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com