தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்த விழாவின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இனிவரும் தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். அடுத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது, ஊழல் குறித்து பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன தகுதி உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பிய அவர், குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

இதனையடுத்து விழா நிறைவு பெற்ற பின்னர் அமித்ஷா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமித்ஷாவிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

இதற்கு பிறகு இரவு 8 மணிக்கு மேல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, கவுதமி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது? தேர்தல் வியூகம் எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com