அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
Published on

சென்னை,

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்குச் சென்ற அவர், அங்கு சிறிது ஓய்வெடுத்த பின்னர், தமிழக அரசு சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு அவரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர்.

இதனையடுத்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இன்றைய விழாவில் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள்;-

* திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டம்

* சென்னையில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டப் பணிகள் துவக்கம்

* கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டம்

* கோவை - அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத் திட்டம்

* சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டம்

* வல்லூரில் ரூ.900 கோடியில் அமையவுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோலிய முனையம்

* காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் இறங்குதளம் அமைக்கும் திட்டம்

* அமுல்லைவாயலில் ரூ.1,400 கோடியில் Lube plant அமைக்கும் திட்டம்.

மேற்கண்ட திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com