

சென்னை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி சென்னை வந்தார். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் திறப்பு, 2-வது மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அந்த விழா மேடையில் பேசிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், அ.தி.மு.க. - பா.ஜ.க. உடனான கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அறிவித்தனர்.
அதன்பின்னர், அன்று மாலை மத்திய மந்திரி அமித்ஷா தங்கியிருந்த ஓட்டலுக்கும் அவர்கள் இருவரும் சென்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
ஆனால், தமிழக பா.ஜ.க. தரப்பில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரை, கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அ.தி.மு.க. - தமிழக பா.ஜ.க. இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை உருவானது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் வரும் 14-ந் தேதி சென்னை வர இருக்கிறார் என தகவல் வெளியானது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் துக்ளக் வார இதழின் 51-வது ஆண்டு நிறைவு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார் என கூறப்பட்டது.
மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தையும் மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி நட்டா சென்னை வருகை தர வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.