

சென்னை,
தமிழக ரெயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் இடையேயான ஒற்றை ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக மாற்ற மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழித்தடங்களை இரட்டை ரெயில் பாதைகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், ஆடுதுறை முதல் கும்பகோணம் வழியாக சுந்தரபெருமாள் கோவில் வரையிலான வழித்தடத்தை இரட்டை ரெயில் பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இக்கோரிக்கையை ஏற்று, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டத்திற்கு தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஒப்புதலுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல். முருகன் தனது மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகமான 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தின்ரெயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான எங்களது கோரிக்கையை ஏற்று, ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் இடையிலான பணிகளுக்கு ஒப்புதல் அளித்த மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இரட்டை ரெயில் பாதை திட்டம், இப்பகுதி மக்களின் பயண வசதியை பலமடங்கு மேம்படுத்துவதுடன், ரெயில் போக்குவரத்து திறனையும், பிராந்திய இணைப்பையும் மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய இரட்டைரெயில் பாதை திட்டத்தின் மூலம் ரெயில்கள் தாமதமின்றி இயங்குவது உறுதி செய்யப்படும் என்றும், ஆன்மீக மற்றும் சுற்றுலா நகரமான கும்பகோணம் பகுதிக்கு வரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த திட்டம் பெரும் உதவியாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.