‘கூட்டணியில் ஒற்றுமை, நோக்கம் முக்கியம்; எங்களிடம் அது தெளிவாக இருக்கிறது’ - கமல்ஹாசன்

கூட்டணியில் எனக்கு பேச்சுவார்த்தை கிடையாது, கடமைதான் உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்தார்.
‘கூட்டணியில் ஒற்றுமை, நோக்கம் முக்கியம்; எங்களிடம் அது தெளிவாக இருக்கிறது’ - கமல்ஹாசன்
Published on

மதுரை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அந்த குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;-

“கூட்டணியில் எனக்கு பேச்சுவார்த்தை என்பது கிடையாது. கடமைதான் உள்ளது. எனக்காக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் எத்தனை தொகுதிகளை பெறப் போகிறோம் என்பதை விரைவில் சொல்வோம். கூட்டணியில் ஒற்றுமையும், நோக்கமும் முக்கியம். அது எங்களிடம் தெளிவாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com