

சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் சென்னை பல்கலைக் கழக அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மாணவர்கள் மெரினா கடற்கரையை ஒட்டிய நேப்பியர் பாலம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் காமராஜர் சாலையில் இருந்து தலைமை செயலகம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்தம்பித்தன. சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக சாலையில் அமர்ந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். மேலும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்தும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர், சாலைமறியலில் ஈடுபட்ட 6 மாணவிகள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர் கிருபாகரன் கூறும்போது, மத்திய அரசு நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அருகில் கூடிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஊர்வலமாக நடந்து வந்தனர். அவர்களை போலீசார் ரெயில் நிலையத்துக்குள் உள்ளே விடாமல் பிரதான நுழைவுவாயில் பகுதியில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் சிலர் வேறு பாதை வழியாக எழும்பூர் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து, 4-வது நடைமேடையில் காலை 10.50 மணிக்கு புறப்பட தயாராக இருந்த ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டம் செய்தனர். உடனே போலீசார் ஓடிச்சென்று ரெயில் முன்பு படுத்து இருந்தவர்கள், ரெயில் நிலையத்துக்கு முன்பு போராடியவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
இதேபோல், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எழும்பூர் ரெயில் நிலையம் முன்பு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நேற்று மாலை 70-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதி அருகே வந்த அவர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.
இருந்தாலும் தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 4-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜின் மாட்டுவதற்கு முன்பாக அதை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.