

கோவை
லஞ்ச வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
அப்போதே லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் அறை, அலுவலகம், பேராசிரியர் தர்மராஜின் அறை உள்பட பல இடங்களில் சோதனை நடத்தி இருந்தனர்.
நேற்றுமுன்தினம் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைக்கழகத்தில் திடீரென சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் 3-வது முறையாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துணைவேந்தர் கணபதியின் அறையில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு ஆதாரங்களை சேகரித்தனர்.
பணிநியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பதிவாளர் வனிதாவிடம் விசாரித்தனர். துணைவேந்தர் கணபதியின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளர் வனிதாவின் உதவியாளர் ராஜன் சங்கர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
பேராசிரியர் பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து துணைவேந்தர் கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். உடல் நிலையை கருத்தில் கொண்டு எனக்கு இட்லியும் சுடு தண்ணீரும் கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கணபதி கோரிக்கை வைத்துள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.