கவர்னர் தலைமையில்பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு-ஊட்டியில் நாளை தொடங்குகிறது

கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு ஊட்டியில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
கவர்னர் தலைமையில்பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு-ஊட்டியில் நாளை தொடங்குகிறது
Published on

சென்னை,

தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, ஒவ்வொரு ஆண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்தி இருந்தார்.அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாட்டை நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார். மாநாட்டின் தொடக்க அமர்வில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.மாநாட்டில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் தொடர்பான விவாதங்கள், விளக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாள் மாநாட்டில் எதிர்கால சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல், புதுமை மற்றும் தொழில் முனைவு, தேசிய சிறப்பு கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல், உலகளாவிய மனித வளங்கள், வளர்ந்துவரும் தொழில்துறை தேவைகளுக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் போன்ற தலைப்புகளின் கீழ் அமர்வுகளும், உரையாடல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

இதில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர், ஏ.ஐ.சி.டி.இ. தலைவர், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் உள்பட பலரும் பங்கேற்று பேச இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com