அநீதியான மசோதாக்கள் தோற்றுப்போனது; ஜனநாயகம் வென்றது.. - துரை வைகோ

மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசின் மறைமுக திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது என துரை வைகோ தெரிவித்தார்.
அநீதியான மசோதாக்கள் தோற்றுப்போனது; ஜனநாயகம் வென்றது.. - துரை வைகோ
Published on

சென்னை,

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஜனநாயகத்தைக் காக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து நம்மை நம் சொந்த நாட்டிலேயே அந்நியப்படுத்தும் அநீதிக்கு எதிராக நான் எனது வாக்கை செலுத்தினேன். எதிர்கட்சிகளின் வலுவான ஒற்றுமையால் நாடாளுமன்ற மக்களவையில் அந்த மசோதாக்களை தோற்கடித்தோம்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் (16.04.2026) தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசனம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா - 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% மகளிருக்கான இடஒதுக்கீட்டை நாம் வரவேற்றாலும்,

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய மசோதாவோடு இணைத்து தாக்கல் செய்துள்ள, மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிராக, அன்றைய நள்ளிரவு 12 மணிவரை காத்திருந்து எனது கருத்தை பதிவுசெய்தேன்.

இவை மூன்று மசோதாக்களையும் சேர்த்து தாக்கல் செய்த மத்திய பாஜக அரசின் தந்திரத்தை தோலுரித்தும் எனது எதிர்ப்பை தெரிவித்தேன்.

அதன் மீதான வாக்கெடுப்பு நேற்று (17.04.2026) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. அப்போது எனது வாக்கினை அந்த மசோதாக்களுக்கு எதிராக செலுத்தினேன்.

மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கினை பெற்றாக வேண்டும் என்ற நிலையில், அதை பெறாமல் அநீதியான அந்த மசோதாக்கள் தோற்றுப்போனது. ஜனநாயகம் வென்றது.

15 ஆண்டுகளுக்கு முன்பு 2010 ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களவையில் விவாதத்திற்கு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, 2023 ஆம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தும் இன்று வரை அதனை நிறைவேற்றாமல் மத்திய பாஜக அரசு தட்டிக் கழித்து வந்ததும், இப்போது அதனை சர்ச்சைக்குரிய இந்த நாடாளுமன்ற மறுவரையறை மசோதாவோடு இணைத்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும், ஜனநாயகத்திற்கு எதிரான, தென்னிந்தியாவிற்கு எதிரான, மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசின் மறைமுக திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வலுவான ஒற்றுமையினால் இந்த மசோதாக்கள் தோல்வியை தழுவிய பிறகு, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுவது போன்ற ஒரு பொய் தோற்றத்தை மக்கள் முன்பாக ஏற்படுத்த மத்திய பாஜக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சி செய்கின்றன. அந்த முயற்சிகள் நிச்சயம் முறியடிக்கப்படும்.

இன்றே, இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை தனியாக பிரித்து தாக்கல் செய்து ஒருமனதாக நிறைவேற்றலாம் என்ற நிலை இருந்தும், அதனையே எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக வைத்தும் மத்திய பாஜக அரசு செவிசாய்ப்பதாக இல்லை.

உண்மையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தனியாக நிறைவேற்ற திரானியற்ற அரசாக, தோல்வியுற்ற அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com