“தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு..” - போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்

போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? என்று உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
“தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு..” - போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்
Published on: 

சென்னை,

போதைப்பொருளை கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகியை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘முதல்-அமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதல்-அமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

பவர் சென்டர்கள்

கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?

ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?

NIA, ED

ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதல்-அமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?

இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com