போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்தப்படும் - மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்தப்படும் - மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட தெற்கு கூவம் சாலையில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தூய்மை பணியை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுப்பேட்டை பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை ராதாகிருஷ்ணன் தானே அகற்றினார். இதேபோல, கழிப்பறைகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அறிவுறுத்தினார்.

பின்னர் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்தல், கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. தூய்மை பணிகள் மேற்கொள்ளும்போது நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அனைத்து தூய்மை பணியாளர்களும் கட்டாயம் கையுறைகள் அணிந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கார் பாகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை கூவத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். இதை மக்கள் உணர்ந்து குப்பைகள் மற்றும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுசுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலை மற்றும் தெருவோரங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பயன்பாடற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத், கவுன்சிலர் சிவ ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com