உ.பி. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்

உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
உ.பி. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்
Published on

சென்னை,

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிகுமார் எம்.பி., சட்டமன்ற வி.சி.க. தலைவர் சிந்தனை செல்வன், துணை பொதுசெயலாளர் வன்னியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, வி.கே.ஆதவன் மற்றும் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எம்.பி. திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் போராடும் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளார்கள். இது இந்தியாவிற்கு மிக பெரிய அவமானம் ஆகும். விவசாயிகளின் போராட்டத்தை குறித்து மத்திய இணை மந்திரியின் மகன் அச்சுறுத்தும் வகையில் பேசி இருக்கிறார். அதனை தொடர்ந்து 2 நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனசாட்சி உள்ள யாராலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி இந்த விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை.

விசாரணை குழு

விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு காரை ஓட்டிய மத்திய இணை மந்திரியின் மகனை கைது செய்யவில்லை. மாறாக அவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தது வேதனைக்கு உரியது.

இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். இந்த வழக்கை உத்தரபிரதேச போலீசோ, சி.பி.ஐ.யோ விசாரித்தால் உரிய நீதி கிடைக்காது. எனவே இந்த சம்பவம் தொடர் பாக சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனி குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com