

சென்னை,
இந்தியாவின் பணப்புழக்கத்தை மாற்றி அமைத்த ஒரு புரட்சிகரமான நடவடிக்கைதான் 'யு.பி.ஐ.' (யுனிபைடு பேமென்ட்ஸ் இன்டர்பேஸ்) என்று கூறப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகும். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வசதி இல்லாத கிராமப்புற மக்களும், எளிய செல்போன் மூலம் வங்கி சேவையை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
2016-17-ல் அடித்தளம் போடப்பட்ட இந்த பண பரிவர்த்தனை பயன்பாடு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க தொடங்கியது. 2017-18-ல் ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனை நடந்தது. அதனைத்தொடர்ந்து 2018-19-ல் ரூ.8.8 லட்சம் கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனையாக இது உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து 2019-20-ல் டிஜிட்டல்மயமாக்குதலில் நாடு வேகம் காட்டியது.
இந்த வேகத்தால், 2020-21-ல் பண பரிவர்த்தனை ரூ.41 லட்சம் கோடி மதிப்பில் நடந்தது. அதன்பிறகு கொரோனா காலத்தில் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெருமளவில் கைகொடுத்தது. அந்த கால கட்டத்தில்தான் இதன் வளர்ச்சியும், தேவையும் அதிகமாக இருந்தது. தொடர்ந்து 2022-23-ல் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் அசுர வளர்ச்சி காணப்பட்டது.
அதன்பின்னரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த 2025-26-ம் ஆண்டில் ரூ.314 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் 24,162 கோடி முறை பரிவர்த்தனை நடந்திருக்கிறது. தினமும் சராசரியாக சுமார் 60 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. கடந்த 2016-17 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான இடைப்பட்ட இந்த 10 ஆண்டுகளில் 'யு.பி.ஐ.' பரிவர்த்தனை பயன்பாடு 3,140 மடங்கு அதிகரித்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
2026-27-ம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.368 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எளிமையான பயனர் பயன்பாடு, பூஜ்ஜிய பரிவர்த்தனை கட்டணம், சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை யு.பி.ஐ. பயன்பாடு பரவியது. குறைந்த விலையில் செல்போன் மற்றும் மலிவான இணைய சேவை போன்றவற்றால் இந்த வளர்ச்சி சாத்தியம் ஆகியுள்ளது.