

பதிவேற்ற வேண்டும்
தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-வது தவணை பிரதமரின் கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை வருகிற 15-ந்தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்பட மாட்டாது. எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட வேண்டும்.
உறுதி செய்யலாம்
பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, தாங்களாகவோ ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பிரதமரின் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
உங்களது செல்போன் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.