

சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்ட ஆலோசனையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வகை செய்ய வேண்டும், இறந்தவர்களின் பெயர்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தரும் விண்ணப்ப மனுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், நவம்பர் மாதத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.