

சென்னை,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வி.சி.க.வுக்கான இடப்பங்கீடு தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தலைவர், துணை தலைவர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பு தர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
விசிகவிற்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைமை பதவிகளில் விசிகவிற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அரியலூர் மாணவி விவகாரத்தில் மதவாத சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர்; பெரியார் பிறந்த மண்ணில் மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். முரண்பாடு இருந்தாலும் பொதுநிகழ்ச்சிகளில் எல்லோரும் கலந்துகொள்ளும் முதிர்ச்சியான அணுகுமுறை வடமாநிலங்களில் பார்க்க முடிகிறது. நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது என கூறினார்.