உருது ஆசிரியர் நியமன விவகாரம்: ஐகோர்ட்டு தீர்ப்பு -எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மைல்கல் என தெரிவித்துள்ளது.
சென்னை
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள "மதராசா-இ-அசாம்" பள்ளியில் உருது ஆசிரியர் ஹாஜிராவின் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் (28.06.2025) தள்ளுபடி செய்து, அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாயமில்லை என ஏற்கனவே இரு முறை தீர்ப்பளிக்கப்பட்டிருந்தும், அரசு மீண்டும் மேல்முறையீடு செய்தது நியாயமற்றது என நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கண்டித்துள்ளனர்.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்துவது, சிறுபான்மை நிறுவனங்களின் மொழி மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
இலக்கிய வளம் மிக்க உருது மொழியை அழிவிலிருந்து காக்கும் வகையில், உருது பள்ளிகளை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்பவும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. உருது மொழி கலாச்சாரத்தை பாதுகாக்கும் முக்கிய கடமை அரசுக்கு இருப்பதையும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. எனவே, இந்த விசயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்த முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் உயர்நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்து, மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை வலுப்படுத்துகிறது.
ஆகவே, தமிழக அரசு இந்த நீதிமன்றத் தீர்ப்பை வழிகாட்டியாகக் கொண்டு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், உருது ஆசிரியர் நியமனங்களை உடனடியாக விரைவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






