சூரப்பா நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பா.ம.க. ஆர்ப்பாட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சூரப்பா நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் நாளை (திங்கட்கிழமை) பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சூரப்பா நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பா.ம.க. ஆர்ப்பாட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு இந்த நியமனத்தை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டிருப்பதை கண்டும் காணாமலும் தமிழக அரசு பதுங்கி, ஒதுங்குவது கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் தமிழகத்தில் இருக்கும்போது அவர்களை புறந்தள்ளிவிட்டு, இல்லாத தகுதியை இருப்பதாகக்காட்டி ஒரு கன்னடரை தமிழகத்தின் பெருமைக்குரிய உயர்கல்வி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் திணிப்பதை மன்னிக்கவே முடியாது. இத்தகைய தருணங்களில் முதல் எதிர்ப்பு தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்ப்பும் வரவில்லை. மாறாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கும், தமிழக அரசுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறி தமிழக அரசு ஒதுங்கிக்கொண்டது.

பெரிய அளவில் எந்த அதிகாரமும் இல்லாத யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள்கூட தங்களின் அதிகார வரம்பில் கவர்னர்கள் குறுக்கிட்டால் அதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு செல்கின்றனர். ஆனால், நமது முதல்-அமைச்சர் கவர்னரிடம் சரணாகதி அடைந்துவிடுகிறார். இது அவமானம்.

தமிழகத்தின் அடையாளமான அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்பில் கன்னடர் அமர்வதை அனுமதிக்கவே முடியாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை ரத்துசெய்து அவரை கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தகுதியுள்ள தமிழர் ஒருவரை புதிய துணைவேந்தராக நியமிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 9-ந்தேதி (நாளை) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகிப்பார். கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறுத் தரப்பினரும் இத்தொடர்முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com