ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்திட வேண்டும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வளைகுடா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்திட வேண்டும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மு.வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

முக்கிய காரணம்

பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை தொடங்கின. இத்தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் அரசியல் பொருளாதார ராணுவ மேலாதிக்க நோக்கம் இதற்கு முக்கிய காரணம்.

போர் பதட்டம்

எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும், ஈரானில் தனது ஆதரவு பொம்மை அரசை உருவாக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா ஈரான் மீதான இத்தாக்குதலை நடத்தி வருகிறது. தற்காப்பிற்காக ஈரானும் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேற்காசியா முழுவதும் போர் பதட்டம் தொடர்கிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா மீறிவிட்டது

வளைகுடா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு பயந்து அச்சத்தோடு வாழ்கின்றனர். ஈரான் நாடு, அணு ஆற்றல், அறிவியல் தொழில்நுட்பம், ராணுவ மற்றும் பொருளாதாரத்தில் மேற்காசியாவில் வல்லமை மிக்க நாடாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கிலும் இத்தாக்குதல்கள் அமெரிக்காவால் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் முன் முயற்சியில் ஏற்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தையும், தொடர்ச்சியான அமைதி பேச்சுவார்த்தைகளையும் அமெரிக்கா மீறிவிட்டது.

ஹார்முஸ் நீரிணை

இப்போரின் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால், ஹார்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய், எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உலகம் எரிபொருட்களின் தட்டுப்பாடும் ,விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இப்போரினால் ஈரான் மற்றும் உலகப் பொருளாதார பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளன. எனவே, ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்காசியாவில் வாழும் இந்தியர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வரவும் உடனடி நவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்திட வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகளுக்குமத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.

சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மு.வரதன் தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, வடசென்னை மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி முன்னிலை வகித்தனர்.

மு.வீரபாண்டியன்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com