சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் - மாயமான 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு

அமெரிக்காவுக்கான இந்திய தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் - மாயமான 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு
Published on

மஸ்கட்,

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியுள்ளது. ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, ஓமன் நாட்டின் மார்ஷல் தீவு அருகே அரபிக்கடலில் நேற்று முன்தினம் சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பயணித்தனர். அந்த சரக்கு கப்பலில் வேதிப்பொருட்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.

அந்த சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கப்பலில் பயணித்த மாலுமிகள் உதவிகோரி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஓமன் கடற்படையினர் விரைந்து சென்று 21 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.

ஆனாலும், கடலில் விழுந்து மாயமான 3 இந்திய மாலுமிகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மாயமான 3 இந்திய மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவுக்கான இந்திய தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில், கடலில் விழுந்து மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துவிட்டனர் என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பந்தப்பட்ட குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் விவரங்களுக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com